Monday, February 13, 2017

நீட் என்பது இருக்கும் கல்வி கொடுமைகளின் ஒரு நீட்சியே. ( எஸ்.எஸ்.பாலாஜி ... சட்டப் பொறியாளர்)

“NEET” மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கையில் (MBBS மற்றும் BDS) இன்றைக்கு பெரிதும் அடிபடுகிற பெயர். இந்த நீட் என்பது NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST ஆகும், அதாவது தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வாகும்.
இதுவரை நீட் என்பது தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசுக்கு தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள் வழங்கும் 15% இடங்களுக்கு மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நாட்டில் உள்ள அணைத்து கல்லுரிகளிலுமே மாணவர் சேர்க்கை நீட் இன் அடிப்படையில் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது, தமிழகத்திலும் இன்னும் சில மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு இருந்ததால் நீட் தொடர்பாக ஒரு அவசர சட்டம் கொண்டுவரப் பட்டதில், இந்த ஆண்டு மட்டும் நீட் இல்லாமலே மாநில அரசின் கவுன்செல்லிங் மூலம் நடைபெறும் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் என இயற்றப்பட்டது,
ஆக அடுத்த ஆண்டு முதல் நீட் உண்டு, இந்த ஆண்டு அரசு கவுன்செல்லிங் மட்டும் அதாவது
1) அரசு கல்லூரிகளில் 85%
2) அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் சிறுபான்மை கல்லூரிகளில் (PRIVATE MINORITY TRUST COLLEGES) 50% மும்,
3) அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பிற தனியார் கல்லூரிகளில் (OTHER PRIVATE COLLEGES) மைனாரிட்டி கல்லூரிகளில் 65% ம்
மாணவர் சேர்க்கைக்கு நீட் கிடையாது.
ஆனால் இந்த ஆண்டு கூட
1. அரசு கல்லூரிகளில் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட 15%
2. அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் சிறுபான்மை கல்லூரிகளில் (PRIVATE MINORITY TRUST COLLEGES) 50% மும்,
3. அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பிற தனியார் கல்லூரிகளில் (OTHER PRIVATE COLLEGES) 35% ம்
4. மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்கள் கீழ் செயல்படும் அணைத்து கல்லூரிகளில் அணைத்து இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கு நீட் உண்டு என்பது தான் நிலை.
நீட் மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க நீட் மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் நடத்தப்பட்டது. இத்தேர்விற்கான பாடத்திட்டத்தை MCI இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்தது.
நீட் மூலம் நடைபெறும் சேர்க்கையில, தேசிய ஒதுக்கீடு அதாவது மாநிலங்கள் வழங்கக்கூடிய இடங்களில் (தமிழகம் 15 வழங்குகிறதே அது போல்) மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கை அதாவது
1. தாழ்த்தப்பட்டோர் (SC) க்கு 15%
2. பழங்குடியினர் (ST) க்கு 7.5%,
3. இதர பிற்பட்டோர் பொருளாதார அடிப்படையில் (OBC NON CREAMY LAYER) 27%
4. மாற்று திறனாளிகள் (PHYSICALLY Challenged) 3% இட ஒதுகீடு வழங்கப்படும்.
மற்ற இடங்களுக்கான இட ஒதுக்கீடு அந்தந்த மாநில அரசின் கொள்கைகளின் அடிப்படையில் இருக்கும்.
நீட் தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் இயற்பியல் (physics), வேதியல் (chemistry), உயிரியல் (BIOLOGY) பாடங்களில் இருந்து இருக்கும். சரியான விடை ஒன்றிற்கு நான்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டும், தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைபட்டும், விடை எழுதாத கேள்விகளுக்கு மதிப்பெண் ஏதும் வழங்காமலும் விடைத்தாள் திருத்தம் இருக்கும்.
தகுதி பட்டியல் மெரிட் லிஸ்ட் marks percentile (மதிப்பெண் சதமாக) அடிப்படையில் இருக்கும், அதோடு தகுதி நிர்ணயம் தரவரிசை சதமாக, ranking percentile ஆக இருக்கும்.
Marks percentile என்றால் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரின் மதிப்பெண் சதமாக கொண்டு கனகிடுதல், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் 700 என்றால் அவரது percentile 100 ஆகும். ஒருவர் 650 மதிப்பெண் எடுத்தார் என்றால் அவரது pecentile 630/700 X 100 = 90 ஆகும்.
Ranking percentile என்பது தேர்வு எழுதிய மொத்த மாணவர் எண்ணிக்கையில் தர வரிசை என்னை கழித்து அதனை மொத்த மாணவர் எண்ணிக்கைக்கான சதமாக கணக்கிடுதல் ஆகும்.
நீட் தேர்வு ஏன் வெறும் நுழைவு தேர்வு என அழைக்கபடாமல் தகுதி நுழைவு தேர்வு என அழைக்கபடுகிறது என்பதற்கான விடை இங்கே தான் வருகிறது...
இத்தேர்வில் வெறும் தரவரிசை அல்லது கட் ஆப் மட்டும் போதாது மாறாக தகுதியானது ranking percentile மூலம் தீர்மானிக்கபடுகிறது.
குறைந்தபட்ச தகுதியானது
1. பொது பிரிவிற்கு (ஜெனரல் category) 50th percentile rank (சதமாக தர எண்)
2. SC/ST மற்றும் OBC க்கு 40th percentile rank (சதமாக தர எண்)
3. மாற்று திறனாளிகளுக்கு 45th percentile rank (சதமாக தர எண்) என்றும் நிர்ணயிக்கபடுகிறது. மேலும் இது ஆண்டுக்காண்டு மாற்றத்திற்குரியது ஆகும்.
பிளஸ் டூ மதிப்பெண் சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளபடுவதில்லை எனினும் தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
1. பொது பிரிவிற்கு (ஜெனரல் catogary) Physics, Chemistry, Biology/Bio-technology இல் மொத்தமாக 50%
2. SC/ST மற்றும் OBC க்கு 40%,
3. மாற்று திறனாளிகளுக்கு 45% என்றும் நிர்ணயிக்கப\ட்டுள்ளது.`
இதில் இறுதியாக சொல்லபடுவது தான் முக்கிய குறிப்பாகும் தேசிய அளவிலான 15% இடங்களுக்கான மாணவர் சேர்க்கை பட்டியல் CBSE வரையறுத்து பட்டியலை உரிய சேர்க்கைக்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அனுப்பி வைக்கும்.
மீதமுள்ள அணைத்து இடங்களுக்கும் மாணவர்கள் தங்களது நீட் மதிப்பெண் மற்றும் தரவரிசை வைத்து மாநில அரசு அல்லது உரிய நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதாகும்.
அப்படியெனில் தற்போது உள்ள நிலையிலேயே மாணவர்கள் தனியார் கல்லூரிகளில், தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் அனுமதிக்கு அவர்களின் நடைமுறையின்படியே அனுமதிக்கபடுவார்கள்.
தமிழகத்தில் இதுவரை மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழக அரசின் கலந்தாய்வு (COUNSELLING) மற்றும் தனியார் கல்லூரிகளின் நேரடி அனுமதியின் (DIRECT ADMISSION) மூலம் நடைபெறுகிறது. மருத்துவ கல்லூரிகள்
1. அரசு மருத்துவ கல்லூரிகள் (GOVERNMENT MEDICAL COLLEGES),
2. அரசு பல்கலைகழகத்தில் இணைக்கப்பட்ட தனியார் கல்லூரிகள் (PRIVATE MEDICAL COLLEGES AFFLIATED TO GOVERNMENT UNIVERSITY i.e DR.MGR MEDICAL UNIVERSITY),
3. தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்கள் கீழ் செயல்படும் மருத்துவ கல்லூரிகள் (PRIVATE MEDICAL COLLEGES UNDER DEEMED UNIVERSITIES)
என மூன்று பிரிவு உள்ளது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் 85% மாநில அரசின் கவுன்செல்லிங் மூலமும், 15% மத்திய அரசின் மாணவர் சேர்க்கைக்கும் (CENTRAL GOVERNMENT QUOTA) வழங்கபடுகிறது.
அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளில் அவை சிறுபான்மை கல்வி நிறுவனங்களாக (MINORITY EDUCATIONAL INSTITUTION) ஆக இருந்தால் 50% மும், சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் 65% மும் அரசு கவுன்செல்லிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது, மீதம் உள்ள இடங்களை அந்த கல்லூரிகளே நிரப்புகின்றன.
தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்கள் கீழ் செயல்படும் மருத்துவ கல்லூரிகளில் அணைத்து இடங்களையுமே அந்தந்த கல்லூரி நிரவாகமே செய்கிறது, ஒரே ஒரு இடம் கூட மாநில அரசின் கலந்தாய்வுக்கு வழங்கபடுவதில்லை.
இதில் ஒரு உண்மைநிலை, புதுவை மற்றும் கர்நாடகாவில் தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்கள் கீழ் செயல்படும் மருத்துவ கல்லூரிகளில் அரசின் மாணவர் சேர்க்கைக்கு குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்கபடுகிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் செயல்படும் இரண்டு நிகர்நிலை பல்கலைகழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மருத்துவ கல்லூரிகள் உள்ளன, இதில் தமிழகத்தில் இயங்கும் கல்லூரியில் அரசின் மாணவர் சேர்க்கைக்கு இடம் தருவதில்லை ஆனால் புதுவையில் தருகின்றது. அதே போல் புதுவையில் செயல்படும் ஒரு நிகர்நிலை பல்கலைகழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மருத்துவ கல்லூரிகள் உள்ளன, அதுவும் தமிழகத்தில் இயங்கும் கல்லூரியில் அரசின் மாணவர் சேர்க்கைக்கு இடம் தருவதில்லை ஆனால் புதுவையில் தருகின்றது.
அரசின் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவ கல்லூரிகள் எப்படி மாணவர் சேர்க்கை நடத்துகிறது?.
அரசு பல்கலைகழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முறையாக நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம், இஸ்லாமிக் அகடெமி ஆப் ஏஜூகேசன் எதிர் கர்நாடக அரசு வழக்கில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அனுமதியினை முறைபடுத்த வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மாணவர் சேர்க்கை முறையாக நடத்த உறுதியளித்தார்கள்.
அப்படி உருவாககபட்ட அமைப்பு Tamilnadu Private Professional Colleges Association - Health Sciences என்பது ஆகும். முறையாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த இந்த கல்லூரிகள் அனைத்தும் தன்னிச்சையாக, அவர்கள் நிர்ணயித்த அணைத்து கட்டணங்களை செலுத்தும் மாணவர்களை முதலில் சேர்த்துக் கொள்வார்கள்.
பின்னர் இந்த மாணவர்களுக்கு மேற்சொன்ன Tamilnadu Private Professional Colleges Association - Health Sciences வழங்கும் ஒரு பொது விண்ணப்பம் வழங்கப்படும், அதே போன்று இந்த தனியார் கல்லூரிகள் சேர்த்த மாணவர்களை மட்டுமே கொண்டு ஒரு தரப் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்கள் எல்லாம் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்படும்.
இதில் கொடுமையிலும் கொடுமை இத்தைகைய முறையற்ற மாணவர் சேர்க்கையினை Tamilnadu Private Professional Colleges Association - Health Sciences முறையானதாக தோற்றம் அளிக்க செய்யும் அரசு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் முறையற்ற செயலை கண்காணிக்க தமிழக அரசு ஒரு குழு “COMMITTEE TO REGULATE-MONITOR THE ADMISSION OF STUDENTS TO PROFESSIONAL COURSES BY SELF FINANCING PROFESSIONAL ARTS AND SCIENCES COLLEGES” இதன் உறுப்பினர் செயலாளராக (MEMBER SECRETARY) தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் (SECRETARY FOR HEALTH AND FAMILY WELFARE) இருக்கிறார்.
இதுபோன்ற குளறுபடிகளை சரி செய்தாலே, தகுதி அடிப்படையிலும், முறையாகவும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.நீட் எந்த மாற்றத்தையும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் கொண்டு வராது. மாறாக
1. மாநில அரசின் உரிமைகள் பறிபோகும்,
2. ஆங்கிலம் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே தேர்வு என்பது, மற்ற மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு அநீதி ஏற்படுத்தும்.
3. தமிழகத்தில் தற்போது உள்ள இட ஒதுக்கீடு முறைக்கு ஆபத்து விளையும்.
4. கிராமப்புற மாணவர்களின் நியாயமான வாய்ப்புகள் பறிபோகும்.
5. ஏற்கனவே இருக்கும் கல்வி கொள்ளை கூடங்கள் போதாது என்று புதிதாக நீட் தேர்வுக்கான புதிய மைய்யங்கள் முளைக்கும் (ஏற்கனவே சென்னையில் நிறைய மைய்யங்கள் முளைத்துவிட்டன) இவைகளில் பெற்றோர்கள் கோடிக்கணக்கில் கல்லூரிக்கு கொடுப்பதை விட இலட்சக்கணக்கில் இந்த மைய்யங்களுக்கு கொட்டிக் கொடுப்பது புத்திசாலித்தனம் என அவற்றை மொய்ப்பார்கள்.
தற்போது இருக்கின்ற மாணவர் சேர்க்கை நடைமுறையினை ஒழுங்கு படுத்துவதை விட்டுவிட்டு நீட் புகுத்துவது ஒரு தெளிவற்ற, மக்கள் விரோத மாற்று முறையாகும், ஆக நீட் என்பது இருக்கும் கல்வி கொடுமைகளின் ஒரு நீட்சியே.

NEET In TN - 1 நீட் தமிழகத்தில் இருக்கா? இல்லையா?

NEET in TN - 2 நீட் தேர்வு நடக்கும் முறை