தருமபுரி சாதி வெறியாட்டத்திற்கும், தமிழகத்திற்கும் தொடர்பே இல்லை எனும் நிலையில் ஜெயலலிதா. பெயரளவில் ஒரு குழு அனுப்பினார் கருணாநிதி, அதன் உறுப்பினர்களை வைத்தே அக்குழுவிற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் வெளிப்பட்டது. அன்றைய சூழலில் பா .ம.க.,இராமதாசுடன் அவர்களின் உறவின் நிலைப்பாடு ஒன்று தான் ,உண்மையின் ஒரு துளியினை அவர்களது அறிக்கையில் உரைக்க வைத்தது . திட்டமிட்ட அரசியல் சுயலாப அடிப்படையிலான அவதூறு பிரச்சாரத்தை இராமதாஸ் மேற்கொண்டும், அவரை நேரிடையாக கண்டிக்க இரு பெரும் கட்சி தலைவர்களும் முன்வரவில்லை. அரசியல் தேவையற்ற, சமூக பார்வை கொண்ட ஆசிரியர். வீரமணி அய்யா கூட்டிய சாதி மறுப்பு திருமண அதரவு மாநாட்டில் கூட, அவருக்காகவே தி.மு.க. பிரதிநிதி அனுப்பப்பட்டார். அவரும் எதவாது ஒரு சாதியினை சார்ந்தவராக இருந்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ?, என இஸ்லாமியரான ரகுமான்கான் அனுப்பப்பட்டார். சாதியவாதத்தை அழுத்தம் திருத்தமாக பேசிவரும் அ .தி.மு.க.வின் பழ கருப்பையா மீது சமூக நீதி காத்த வீராங்கனை இன்றுவரை ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. இந்த சூழலில் கருணாநிதியின் கண்டனமும், ஜெயலலிதாவின் தடை நீக்கமும் முழுக்க முழுக்க சுயலாப அரசியல் நடவடிக்கைகளே.
கடந்தகாலத்தில் தனது ஆட்சிக்காலத்தின் போது, மேன்மையாளர் எழுச்சித் தமிழர் அவர்களுக்கு தடை விதித்ததை மறந்து, தன் மீது இராமதாஸ் கடும் விமர்சனங்களை முன் வைத்தும், வசை பாடியும், கேவலமாக பேசியும் கூட இன்றைக்கு இராமதாசுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்க குரல் கொடுத்துள்ளார் கருணாநிதி. ஜெயலலிதா தமிழகத்தை குட்டிசுவராக்கிவிட்டார் என்றல் லாம் இராமதாசும், குட்டி.இராமதாசும் பேசிவந்தாலும் அவர்களுக்கு பணிந்து ஜெயலலிதா தடை நீக்கம் செய்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக பொறுப்பேற்று அக்கட்சியின் புதிய செயல் திட்டத்தை முன்னெடுக்க போகும் இராகுல் காந்திக்கு தி.மு.க.மீதும், கருணாநிதி மீதும் நல்லெண்ணம் இல்லை எனபது வெளிப்படை. அதோடு இராகுலுடன் விஜயகாந்த் நேரிடையாக தொடர்பு கொண்டுள்ளார். இதனால் கூட்டணி வரும் போது காங்கிரஸ் ,விஜயகாந்த் nexus (தொடர்பு) தி.மு.க. விற்கு நிச்சயம் அழுத்தம் கொடுக்கும் அப்படிப்பட்ட நிலை தவிர்க்க அல்லது எதிர்கொள்ள பா.ம.க.விற்கு நேசக்கரம் நீட்டுகிறார் கருணாநிதி.
காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருப்பதால் anti-incumbency (ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை) இருக்கும் என்றும், அதோடு அவர்கள் தி.மு.க.வை விட்டு வரும் நிலையில் இல்லை என்று ஜெயலலிதா கருதுகிறார். .பி.ஜே .பி க்கு தமிழகத்தில் ஒரு அமைப்புரீதியான வாக்கு வங்கியில்லை, எனவே, ஏதேனும் ஒரு கட்சி துணை தேவைபடுகிறது அ .தி.மு.க.விற்கு. இரு திராவிட கட்சிகளுடன் (அ .தி.மு.க., .தி.மு.க.) இணைய மாட்டேன் என, (கடந்த காலங்களில் அவரது வாய் சுத்தம் நாடறிந்தது )பேசிவரும் இராமதாசை சற்று உலுக்க தடை விதித்தார் ஜெயலலிதா. அந்த சந்தர்பத்தை கருணாநிதி பயன்படுத்த முன்வந்ததை தொடர்ந்து தடையினை திரும்ப பெற்றார்.
சரி இப்படியெல்லாம் இராமதாசை இரு திராவிட கட்சிகளும் தாங்கி பிடிப்பது உண்மையில் அவர் வன்னிய சாதியின் ஓட்டை ஒருங்கிணைத்து வைத்து இருக்கிறார் என்பதாலா ?. இல்லை, அது நிச்சயமாக இல்லை என்பது இரண்டு கட்சி தலைவர்களுக்கும் தெரியும். பின் எதற்காக, இராமதசுடன் அவர்கள் சேர்வது அவருடன் வன்னியர் வாக்கு வரும் என்பதால் அல்ல அவர் இருப்பதன் மூலம் தங்களது கட்சி வன்னியர் வாக்குகளை ஒருங்கிணைக்கவே.
ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல் நிலை ஒன்று இருக்கிறது. ஒரு ஒப்பீட்டு அளவிற்காக அரசியலில் இருக்கும் வன்னியர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அ .தி.மு.க.வின் மொத்த உறுப்பினர் 100 அதில் வன்னியர் 35 தி.மு.க வின் மொத்த உறுப்பினர் 100 எனில் அதில் 40 பேர் வன்னியர். பா .ம.க.வின் மொத்த உறுப்பினர் 15 மொத்தம் வன்னியர். இராமதாசுடன் கூட்டணி சேருகிறார்களோ இல்லையோ அவரை விமர்சனம் செய்தாலே தங்களுடன் இருக்கும் வன்னியர் வாக்கை இழக்க கூடுமோ என்கிற சூழல். இது நிச்சயம் தவறான புரிதல் என்பது யதார்த்தமான உண்மை.எதை தின்றால் பித்தம் தீரும்?., அரசியல் அதிகாரம் கிடைக்கும் அல்லது நிலைக்கும் என இரு திராவிட கட்சிகளும் அவரை போட்டி போட்டு கொண்டு கை தூக்குகிறது.
வன்னியர்கள் ஒட்டுமொத்தமாக அல்லது இன்னும் குறிப்பாக பெருவாரியாக இராமதாசை தலைவராக ஏற்று கொள்ளவில்லை. அதற்கு சான்று பெருபான்மையாக வன்னியர்கள் இருக்கும் பாண்டிச்சேரியில் இராமதாஸ் கட்சி ஒன்றும் சாதிக்க முடியவில்லை. அவர் வசிக்கும் திண்டிவனதிலேயே அவர் கட்சி தனியாக 5 நகரமன்ற உறுப்பினர் தான் பெறமுடிந்தது.ஆனால் அவர் வன்னியர்கள் மத்தியில் பலம் பெற்றவர் என்கிற வடிவம் (image) உள்ளதற்கு காரணம் அவரை தேவையில்லாமல் அவரது சாதிக்காரன் விமர்சிப்பதில்லை. அவர் எதனை அந்தர் பல்டி ஆகாச பல்டி அரசியலில் அடித்தாலும் எந்த வன்னியனும் வசைபாடுவதில்லை. கொள்கை என எதை பிதற்றினாலும் எந்த வன்னியனும் கேள்விகளை முன் வைப்பதில்லை.பெருவாரியான வன்னிய இன மக்கள் இராமதாசை ஒரு பொருட்டாக நினைக்கமால் அவரைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலை தவறாக புரியப்பட்டு அவரின் அரசியல் பிழைப்பு நடந்து கொண்டு இருக்கிறது. வரலாறு முக்கியம் அமைச்சரே என வாழும் புலிகேசி இராமதாசர் வீராதி வீரராய் தெரிவது இப்படி தான்.
ஒடுக்கப்பட்ட மக்களை அநீதிக்கு ஆளானவர்களை அணி திரட்டி, மாதர் குல மான்பிற்கு போராடி வரலாறு படைத்து வரும் மேன்மையாளர் தலைவர் அண்ணன்.எழுச்சித் தமிழரை உலகம் உணரும் நாள் விரைவில் வரும். ஒடுக்கப்பட்டோர் விடுதலை வேண்டி, கருத்தியல் வாளேந்தி, கொள்கையினை கேடயமாக்கி போராடும் மேன்மையாளர் தலைவர் அண்ணன்.எழுச்சித் தமிழர் அவர்கள் இடும் கட்டளை ஏற்று கடமையாற்றி களமாடுவோம். இதனை இன்றே உணர்வீர் நாளை முதல் நன்றே அமையும் நம் உலகம்.