Monday, September 30, 2013

மக்களவை தேர்தலில் தமிழகத்தின் அணிகள்




எனது இந்த பதிவின் நோக்கம், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழகத்தின் அணிகள் எப்படி அமையக்கூடும் என்பதை அலசுவது தான். இதனை நான் சார்ந்து இருக்கும் இயக்கத்தின் கருத்தாகவோ, அல்லது நிலையாகவோ நான் நிச்சயம் வெளிபடுத்தவில்லை.

தமிழகத்தின் அரசியல் சூழல் பொதுவாக மற்ற மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இங்கு தான் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் நான்காம், அய்ந்தாம் நிலைகளில் உள்ளது. பக்கத்தில் உள்ள ஆந்திராவில் காங்கிரஸ் வலிமையாக உள்ளது, கர்நாடகாவில் காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டும் வலிமை, கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதிக்கம், அவ்வளவு ஏன் பாண்டிச்சேரியில் கூட காங்கிரஸ் தாக்கம் அதிகம். இது நாட்டின் தென் பகுதியில் மட்டும் அல்ல, மத்திய, வட இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சிகள் ஒன்றுக்கு மேற்பட்டவையின் ஆதிக்கம் நிச்சயம்.

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க ஆகியவை பிரதானமாக இருந்தாலும், அவைகளின் வெற்றி தோல்வி பெருமளவு கூட்டணி கட்சிகளை பொறுத்தே அமையும். இங்கு தேசிய கட்சியான காங்கிரஸ் வாக்கு பலம் இல்லையென்றாலும் அது மாநிலம் முழுதும் அறியப்பட்ட கட்சி, பி.ஜே,பி.யின் நிலை அதுவன்று. அடுத்து வாக்கு வங்கி என வரும் போது அ.தி.மு.க., தி.மு.க அடுத்த நிலையில் காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., வி.சி.க., பா.ம.க., சி.பி.எம், சி.பி.ஐ. ஆகியவை, ம.ம.க., புதிய தமிழகம் பி.ஜே.பி உள்ளிட்ட மற்ற கட்சிகள் அடுத்த நிலையில்.

தேர்தல் முடிவை தீர்மானிக்ககூடிய அம்சங்களில், கட்சிகளின் தற்போதைய நிலையென்ன?

தேசிய அளவிலான பிரச்சனைகள் தமிழக வாக்காளர்களை குறிப்பாக புறநகர் பகுதிகளில் பாதிப்பதில்லை. ஆனால் நிலையான ஆட்சி என்பதற்கு செவி சாய்ப்பார்கள். அதே நேரத்தில் மாநில அரசியலுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.

இன்றைக்கு மக்கள் முன் இருக்கும் விவகாரங்கள் அல்லது தேவைகள் மின்சாரம், பாசனத்திற்கு நீர் அது காவிரி,முல்லை பெரியார், தமிழீழ போராட்டம், மதசார்பின்மை.
  
இதில் தமிழீழ போராட்டத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகள் காங்கிரஸ், பி.ஜே.பி. மற்றும் இடது சாரிகளின் நிலை ஏறக்குறைய ஒன்றே.
இங்குள்ள பிரதான கட்சிகள் அ.தி.மு.க., தி.மு.க கடந்தகாலங்களில் இருந்த நிலையில் சற்று மாற்றி வந்துள்ளது என்றாலும் தமிழ் ஈழம் தான் ஈழ பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு என அறிவிக்க தயக்கம் கொண்டவை.

தமிழ் ஈழம் என வலியுறுத்தும் கட்சிகள் அல்லது வெளிப்படையாக செயல்படும் கட்சிகள் ம.தி.மு.க., வி.சி.க., மட்டுமே. இதில் தேர்தலில் ஈடுபடாத இயக்கங்கள் சார்ந்து நிற்பது ம.தி.மு.க.வுடன்.

மதசார்பின்மை என வரும்போது காங்கிரஸ், இடதுசாரிகள் தேசிய அளவிலும், இங்குள்ள அணைத்து கட்சிகளும் அந்த நிலையில் தான் இருப்பதாக சொல்கின்றனர். இதனை ஏற்பவர்களும், மறுபவர்களும் இருந்தாலும் பி.ஜே.பி மதசார்புள்ள நிலைப்பாடு கொண்ட கட்சி என்பதை அனைவரும் ஏற்று கொள்கிற நிலை.

அ.தி.மு.க மதச்சார்பற்றதாக சொன்னாலும், பி.ஜே.பி. யோடு இணைந்து செயல்படக்கூடிய கட்சிகளில் முதன்மையானதாகும். இன்றைய சூழலில் அ.தி.மு.க., இடதுசாரிகள் ஒன்றாகவும், தி.மு.க. வி.சி.க. ஒன்றாகவும் செயல்பட்டு வருகிறது இந்த அணி காங்கிரஸ் கட்சியோடு முரண்படாமல் இருக்கிறது. தே.மு.தி..க, ம.தி.மு.க, பா.ம.க., ம.ம.க., பி.ஜே.பி. புதிய தமிழகம் ஆகியவை எந்த அணியில் சேரும் ?

தமிழீழ பிரச்சனை இன்றைக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக உள்ளது. இன்னும் குறிப்பாக இந்த பிரச்சனை தமிழீழ விடியல் என்கிற பார்வையில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, மாறாக காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற நிலையில் அது கூராக்கபட்டு இருக்கிறது. ஆக இந்த காங்கிரஸ் எதிர்பை அ.தி.மு.க. சாதகமாக்கி கொள்ள முயலும்.
அதே வேளையில், அதனை தனது பக்கம் திருப்பி கொள்ள ம.தி.மு.க. காய்களை நகர்த்துகிறது. அதனால் தான் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு, மாணவர்கள் போராட்டத்தை தங்கள் வசபடுத்தி அவர்களுக்கு போரட்ட களத்திற்கு  தேவையான வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்தது என அடுக்கலாம்.
தே.மு.தி.க. காங்கிரஸ் பக்கம் சாய்ந்து, தி.மு.க.வுடன் அணி சேர்வதா அல்லது பி.ஜே.பி. ம.தி.மு.க. அணியில் இடம் பெறுவதா என்கிற குழப்பம்.
தனித்து போட்டி என பறைசாற்றி வரும் பா.ம.க. நிச்சயம் ஒரு கூட்டணியில் இடம்பெறும், அப்படி அவர்கள் இடம் பெறுவது மூன்றாவது அணியில் எனும் போது அவர்களும் மீசையில் மண் ஒட்டவில்லை என கூற வாய்பளிக்கும்.

தி.மு.க. இன்றுவரை காங்கிரஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட்டாலும் அது இப்படியே இருக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. ஒருபுறம் நாடெங்கிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலையோடு, தமிழ் தேசியவாதிகள் எதிர்ப்பு கருத்துருவாக்கம் உள்ள நிலை நிச்சயம் தி.மு.க. அறியும் எனவே காங்கிரஸ் இல்லாமல் தேர்தலை சந்திக்க முன் வரலாம்.

இன்றைய சூழலில் அ.தி.மு.க. அணிக்கு ஒரு பலம், அவர்களது மாநில அரசின் கடமைகளை தவறி இருந்தாலும் அதற்கு காரணம் அந்த அதிகாரங்கள் மத்திய அரசிடம் தான் இருக்கிறது என்றும், நாற்பது ஜெயித்தால் பிரதமர் என்கிற பிரச்சாரமும் ஒரு சாராரிடம் எடுபடும் என்பது உண்மை நிலை. இந்த அணி மேலும் வலிமையுற தமிழ் தேசிய கட்சிகளை இணைக்கும் வாய்ப்புகளை பார்த்து வருகிறது.
எனது தனிப்பட்ட பார்வையில் உருவாகக்கூடிய அணிகள்

                அ.தி.மு.க. தலைமை               தி.மு.க. தலைமை

உள்ளவை        இடது சாரிகள்                         வி.சி.க.

வரக்கூடியவை      ம.தி.மு.க.                   காங்கிரஸ், தே.மு.தி.க.,                                                    புதிய தமிழகம்

ஊசலாட்டம்                     ம.ம.க. பா..ம.க

மூன்றாவது அணி வாய்ப்பு : பி.ஜே.பி., ம.தி.மு.க, பா.ம.க.

இதில் ஒருவேளை தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ் இல்லையெனில் (தி.மு.க.,தே.மு.தி.க., வி.சி.க.) மூன்றாவது அணி வலுப்பெறுவது, தி.மு.க.கூட்டணிக்கு நன்மை தரும்.




Saturday, January 26, 2013

இராமதாசுக்கு கடலூர் மாவட்டத்தில் விதிக்கபட்ட தடையினை, திரு.கருணாநிதி கண்டித்ததற்கும் , அதன் பின் ஜெயலலிதா அம்மையாரின் அரசு அதனை திரும்பபெற்றதர்க்கும் உள்ள பின்னணி என்னவாக இருக்க முடியும்?.

இராமதாசுக்கு கடலூர் மாவட்டத்தில் விதிக்கபட்ட தடையினை, திரு.கருணாநிதி கண்டித்ததற்கும் , அதன் பின் ஜெயலலிதா அம்மையாரின் அரசு அதனை திரும்பபெற்றதர்க்கும் உள்ள பின்னணி என்னவாக இருக்க முடியும்?.
  • தருமபுரி சாதி வெறியாட்டத்திற்கும், தமிழகத்திற்கும் தொடர்பே இல்லை எனும் நிலையில் ஜெயலலிதா. பெயரளவில் ஒரு குழு அனுப்பினார் கருணாநிதி, அதன் உறுப்பினர்களை வைத்தே  அக்குழுவிற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் வெளிப்பட்டது. அன்றைய சூழலில் பா .ம.க.,இராமதாசுடன்  அவர்களின் உறவின் நிலைப்பாடு ஒன்று தான்  ,உண்மையின் ஒரு துளியினை அவர்களது அறிக்கையில் உரைக்க வைத்தது . திட்டமிட்ட அரசியல் சுயலாப அடிப்படையிலான அவதூறு  பிரச்சாரத்தை இராமதாஸ் மேற்கொண்டும், அவரை நேரிடையாக கண்டிக்க இரு பெரும் கட்சி தலைவர்களும் முன்வரவில்லை. அரசியல் தேவையற்ற, சமூக பார்வை கொண்ட ஆசிரியர். வீரமணி அய்யா  கூட்டிய சாதி மறுப்பு திருமண அதரவு மாநாட்டில் கூட, அவருக்காகவே  தி.மு.க. பிரதிநிதி அனுப்பப்பட்டார். அவரும் எதவாது ஒரு சாதியினை சார்ந்தவராக இருந்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ?, என இஸ்லாமியரான ரகுமான்கான் அனுப்பப்பட்டார். சாதியவாதத்தை அழுத்தம் திருத்தமாக பேசிவரும் அ .தி.மு.க.வின் பழ கருப்பையா மீது  சமூக நீதி காத்த  வீராங்கனை இன்றுவரை ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. இந்த சூழலில் கருணாநிதியின் கண்டனமும், ஜெயலலிதாவின் தடை நீக்கமும் முழுக்க முழுக்க சுயலாப அரசியல் நடவடிக்கைகளே.  
  • கடந்தகாலத்தில்  தனது ஆட்சிக்காலத்தின் போது, மேன்மையாளர் எழுச்சித் தமிழர் அவர்களுக்கு தடை விதித்ததை மறந்து, தன்  மீது இராமதாஸ் கடும் விமர்சனங்களை முன் வைத்தும், வசை பாடியும், கேவலமாக  பேசியும் கூட இன்றைக்கு  இராமதாசுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்க  குரல் கொடுத்துள்ளார் கருணாநிதி. ஜெயலலிதா தமிழகத்தை குட்டிசுவராக்கிவிட்டார் என்றல்லாம் இராமதாசும், குட்டி.இராமதாசும் பேசிவந்தாலும் அவர்களுக்கு பணிந்து ஜெயலலிதா தடை நீக்கம் செய்கிறார். 
  • காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக பொறுப்பேற்று அக்கட்சியின் புதிய செயல் திட்டத்தை முன்னெடுக்க போகும் இராகுல் காந்திக்கு தி.மு.க.மீதும், கருணாநிதி மீதும் நல்லெண்ணம் இல்லை எனபது வெளிப்படை. அதோடு இராகுலுடன் விஜயகாந்த் நேரிடையாக தொடர்பு கொண்டுள்ளார். இதனால் கூட்டணி வரும் போது காங்கிரஸ் ,விஜயகாந்த் nexus (தொடர்பு) தி.மு.க. விற்கு நிச்சயம் அழுத்தம் கொடுக்கும் அப்படிப்பட்ட நிலை தவிர்க்க அல்லது எதிர்கொள்ள பா.ம.க.விற்கு நேசக்கரம் நீட்டுகிறார் கருணாநிதி.
  • காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருப்பதால்  anti-incumbency (ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை) இருக்கும் என்றும், அதோடு அவர்கள் தி.மு.க.வை விட்டு வரும் நிலையில் இல்லை என்று ஜெயலலிதா கருதுகிறார். .பி.ஜே .பி க்கு தமிழகத்தில் ஒரு அமைப்புரீதியான வாக்கு வங்கியில்லை, எனவே, ஏதேனும் ஒரு கட்சி துணை தேவைபடுகிறது அ .தி.மு.க.விற்கு.  இரு திராவிட கட்சிகளுடன் (அ .தி.மு.க., .தி.மு.க.) இணைய மாட்டேன் என, (கடந்த காலங்களில் அவரது வாய் சுத்தம் நாடறிந்தது )பேசிவரும் இராமதாசை சற்று  உலுக்க தடை விதித்தார் ஜெயலலிதா.  அந்த சந்தர்பத்தை கருணாநிதி பயன்படுத்த முன்வந்ததை தொடர்ந்து தடையினை திரும்ப பெற்றார்.   
  • சரி இப்படியெல்லாம் இராமதாசை இரு திராவிட கட்சிகளும் தாங்கி பிடிப்பது உண்மையில் அவர் வன்னிய சாதியின் ஓட்டை ஒருங்கிணைத்து வைத்து இருக்கிறார் என்பதாலா ?. இல்லை, அது நிச்சயமாக இல்லை என்பது இரண்டு கட்சி தலைவர்களுக்கும் தெரியும். பின் எதற்காக, இராமதசுடன் அவர்கள் சேர்வது அவருடன் வன்னியர் வாக்கு வரும் என்பதால் அல்ல அவர் இருப்பதன் மூலம் தங்களது கட்சி வன்னியர் வாக்குகளை ஒருங்கிணைக்கவே.
  • ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல் நிலை ஒன்று இருக்கிறது. ஒரு ஒப்பீட்டு  அளவிற்காக அரசியலில் இருக்கும் வன்னியர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அ .தி.மு.க.வின் மொத்த  உறுப்பினர் 100 அதில் வன்னியர் 35 தி.மு.க வின் மொத்த உறுப்பினர் 100 எனில் அதில் 40 பேர் வன்னியர். பா .ம.க.வின் மொத்த உறுப்பினர் 15 மொத்தம் வன்னியர். இராமதாசுடன் கூட்டணி சேருகிறார்களோ இல்லையோ அவரை விமர்சனம்  செய்தாலே தங்களுடன் இருக்கும் வன்னியர் வாக்கை இழக்க கூடுமோ என்கிற சூழல். இது நிச்சயம் தவறான புரிதல் என்பது யதார்த்தமான  உண்மை.எதை  தின்றால் பித்தம் தீரும்?., அரசியல் அதிகாரம் கிடைக்கும் அல்லது நிலைக்கும் என  இரு திராவிட கட்சிகளும் அவரை போட்டி போட்டு கொண்டு கை தூக்குகிறது.
  • வன்னியர்கள் ஒட்டுமொத்தமாக அல்லது  இன்னும் குறிப்பாக பெருவாரியாக இராமதாசை தலைவராக ஏற்று கொள்ளவில்லை. அதற்கு சான்று பெருபான்மையாக வன்னியர்கள் இருக்கும் பாண்டிச்சேரியில் இராமதாஸ் கட்சி ஒன்றும் சாதிக்க முடியவில்லை. அவர் வசிக்கும் திண்டிவனதிலேயே அவர் கட்சி தனியாக 5 நகரமன்ற உறுப்பினர் தான் பெறமுடிந்தது.ஆனால் அவர் வன்னியர்கள் மத்தியில் பலம் பெற்றவர் என்கிற வடிவம் (image) உள்ளதற்கு காரணம் அவரை தேவையில்லாமல் அவரது சாதிக்காரன் விமர்சிப்பதில்லை. அவர் எதனை அந்தர் பல்டி ஆகாச பல்டி அரசியலில் அடித்தாலும் எந்த வன்னியனும் வசைபாடுவதில்லை. கொள்கை என எதை பிதற்றினாலும் எந்த வன்னியனும் கேள்விகளை முன் வைப்பதில்லை.பெருவாரியான வன்னிய இன மக்கள் இராமதாசை ஒரு பொருட்டாக நினைக்கமால் அவரைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலை தவறாக புரியப்பட்டு அவரின் அரசியல் பிழைப்பு நடந்து  கொண்டு   இருக்கிறது. வரலாறு முக்கியம் அமைச்சரே என வாழும் புலிகேசி இராமதாசர் வீராதி வீரராய்  தெரிவது இப்படி தான். 
  • ஒடுக்கப்பட்ட மக்களை அநீதிக்கு ஆளானவர்களை அணி திரட்டி, மாதர் குல மான்பிற்கு போராடி வரலாறு படைத்து வரும் மேன்மையாளர் தலைவர் அண்ணன்.எழுச்சித் தமிழரை உலகம் உணரும் நாள் விரைவில் வரும்.  ஒடுக்கப்பட்டோர் விடுதலை வேண்டி, கருத்தியல் வாளேந்தி, கொள்கையினை கேடயமாக்கி போராடும் மேன்மையாளர் தலைவர் அண்ணன்.எழுச்சித் தமிழர் அவர்கள் இடும் கட்டளை ஏற்று கடமையாற்றி களமாடுவோம். இதனை இன்றே உணர்வீர் நாளை முதல் நன்றே அமையும் நம் உலகம்.
  • மக்கள் விடுதலை --- யுக்திகளும், செயல்முறைகளும்

    மதுரை கடலூர் மாவட்டங்களில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையினை தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டித்துள்ளார். இது சாதிய வன்முறையினை வளர்த்தெடுக்கும் ராமதாசின் செயல்களுக்கு துணை போகும் ஒரு நிலை தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

    பொதுவாக ஒருவரிடம் ஒன்றை எதிர்பார்ப்பது அவரது தன்மையினை அறிந்து, அதனடிப்படையில் தான் எதிர் பார்க்க முடியும். திரு.கருணாநிதியின் அறிக்கை ராமதாசுக்கு அதரவாக பேசியிருக்கும் நிலை, கடந்த காலங்களில் அவரது நிலைப்பாடு பல்வேறு காலகட்டங்களில் அமைந்தது அவரது,அவர் கட்சியின் அரசியல் இலாப கனக்கினையொட்டியே இருக்கும்.

    நெருக்கடிநிலையினை (MISA) கடுமையாக எதிர்த்து, “கொடி - திருப்பி பிடித்தால் தடி” என்றதும், இந்திரா காந்தி அம்மையாரை அவரது கட்சி முன்னணியினர் அவர் முன்னிலையிலேயே வசைபாடியதும், சில வருடங்களுக்கு பின் 1980 நடைபெற்ற தேர்தலில் அதே இந்திரா அம்மையாரோடு கூட்டு சேர்ந்து “நேருவின் மகளே வருக ! நிலையான ஆட்சி தருக” என்றார்.

    என்னை கொல்ல சதி செய்தார் வைகோ என்றார் பின் அவருடனே கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தார். பண்டாரம் பரதேசிகள் என விமர்சித்த பி.ஜி.பி. யோடு பின்னாளில் தேர்தல் கூட்டு. இப்படி பல உங்கள் நினைவு சக்கரத்தை சுழற்றினால் கண் முன் வரும். அவர் வசை பாடியவர்களையும்,அவரை வசை பாடியவர்களையும் அவர் தேடிபிடித்து இணைவது அரசியல் இலாப கனக்கினையொட்டியே.

    சரி அப்படிப்பட்ட தி.மு.க. வோடு ஏன் கூட்டு?. கருணாநிதி அவர்களோடு ஏன் உறவு ?. அ. தி.மு.க. வோடு அரசியல் உறவு கொள்ளலாமே என்பது நல்ல கேள்வி தான்.

    மேற்சொன்ன அரசியல் இலாப கனக்கினையொட்டிய நிலைபாட்டிற்காக தி.மு.க. வை விடுத்து நாடுவது அ. தி.மு.க. என்றால் அவர்கள் இந்த களத்தில் செய்துள்ள சாகசங்கள் கொஞ்சமா ?.

    காங்கிரஸ் கட்சியின் மைய அரசு நிர்வாகத்தின் செல்வாக்கோடு, ஜா, ஜெ என இரண்டாக இருந்து பின் இணைந்து, இழந்த இரட்டை இல்லை சின்னத்தை பெற்றார் ஜெயலலிதா அம்மையார். 1991ஆம் ஆண்டு தேர்தலில் இராஜீவ் மரண அலையில் ஆட்சியில் அமர்ந்து இரண்டு வருடங்களிலேயே காங்கிரஸ் கட்சியினை உதறியதும், 1996 சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்கு பின், 1998 பாராளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி யோடுகூட்டு சேர்ந்ததும், அவர்கள் பதவியேற்க கூட்டணி கட்சி கடிதத்தை கொடுக்காமல் வாஜ்பாய் அவர்களை வாட்டியதும் அத்வானி அவர்களுக்கு செலக்டிவ் அம்னிசியா என்றதும் தெரிந்ததே. 1999 பாராளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி. யினை உதறி இனி ஏன் வாழ்நாளில் அவர்களோடு கூட்டணி வைக்கமாட்டேன்என சத்தியமே செய்தார்.

    இவையெல்லாம் நினைவிற்கு கொண்டு வருவது, இருபெரும் கட்சிகளின் இயல்பான நிலை இது என்பதும், இந்த நிலையினை அவர்கள் மேற்கொள்வது ஒரு அடிப்படையில் தான் அது அரசியல் இலாப கணக்கு.

    அப்படியானால் இவர்கள் இருவரையும் தவிர்த்து அரசியல் அரங்கில் தனித்தே பயணிக்கலாமே ?.

    நம்முடைய நெடுந்தூர சமூகப்பயணம் என்பது அரசியல் அதிகாரம் அடைந்து மக்கள் விடுதலை பெறுவது என்பதாகும். அதற்காக மேற்கொள்ள வேண்டிய கட்டாய யுக்திகளும், செயல்முறைகளும் தேவைபடுகின்றது.

    பாபர் மசூதியினை இடிப்பதற்கு கரசேவகர்களை அனுப்பிய ஜெயலலிதாவோடு, இஸ்லாமிய இன விரோத, முன்னணி செயல்பாட்டாளர் நரேந்திர மோடிக்கு விருந்து வைத்தும், அவரை தனது நெருங்கிய சக தோழராக பாவிக்கும் ஜெயலலிதாவோடு இஸ்லாமிய இயக்கங்கள் பயணித்து, தேர்தல் களத்தில் ஆதாயம் அடைந்துள்ளனர், அரசியல் அதிகார ஆதாரங்களையும் வென்று வருகின்றனர்.

    கடந்தகாலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தடையாக இருந்த, தெரிந்த சக்திகளோடு அரசியல் பயணம் மேற்கொண்டது ஒரு யுக்தி தான்.

    இன்றைக்கு கருணாநிதியின் அறிக்கையினை அடுத்து, மேன்மையாளர் தலைவர் எழுச்சித் தமிழரின் அளப்பறியா களப்பணியினை, மறந்தும், மறைத்தும், சிலர் உள்நோக்கோடும், பலர் அறியாமையாலும் அவரின் நிலை என்ன எனும் வினா எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு கீழே இருப்பது எனது சிற்றறிவிற்கு எட்டிய பதில்.

    தந்தை பெரியாரை பார்பனர்களுக்கு ஆகாது ஆனால் அவர் படத்தை போட்டு சமூக நீதி காத்த வீராங்கனை என பறைசாற்றி கொள்ளும் ஜெயலலிதாவை, ஒட்டுமொத்த பார்பன சமூகமும் ஆதரிக்கிறது. எத்தனையோ அறிவாளிகள் இருந்தும் வன்னியர் சமூகத்தில் பெரும்பான்மையினர் ராமதாசை ஏற்று அவர் பின் செல்கின்றனர். காரணம் அவர்களுக்கு தெரிகின்றது தங்களது தலைவர் யார் என்பதும், அவர் எங்கிருந்தாலும் தங்களின் தலைவர் என்பதும்.

    ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிர வேண்டும், சாதியற்ற சமூகம் மலர வேண்டும் என உள்ளமும் உறுதியும் கொண்டோர் அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய தலைவர் மேன்மையாளர் எழுச்சித் தமிழர்.

    ஒட்டுமொத்த இந்தியாவிற்கு அரசியல் அமைப்பு சட்டம் தந்தும், பிற்படுத்தப்பட்டோர், மகளிர் என அனைவருக்கும் போராடிய பாடுபட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை சாதிய வட்டத்திற்குள் இன்றுவரை சமூகம் அடைத்து வைத்து இருப்பது அறியாமையில் அல்ல ஆண்டாண்டு காலமாக மண்ணுக்கு உரியவர்களை மண்ணிலேயே போட்டு மிதித்து அனுபவித்து வரும் தங்களது சுகபோக நிலை மாறக்கூடாது என்பது தான்.

    புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும், மேன்மையாளர் எழுச்சித் தமிழரையும் அவர்கள் யாருக்காக போராடுகிறார்களோ அவர்கள் அறிந்ததைவிட அவர்கள் யாரை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் நன்கு அறிந்துள்ளனர்.

    ஆயிரத்தில் ஒருவன் எனும் திரைபடத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர்., ஒழுக்க சீலர், கொள்கை நெறிப்பட வாழ்பவர். இருப்பினும் அவர் வில்லன் நம்பியாரோடு கைகோர்பார் , வேறொரு வில்லனிடம் இருந்து விடுபடுவதர்காக. அதன் பின் நம்பியாரோடு கடற்கொள்ளையில் ஈடுபடுவார், அது தன்னை சார்ந்த மக்களை காப்பாற்றுவதற்காகவும், தனது மக்கள் விடுதலைக்கு எதிராக நிற்கும் முதன்மை வில்லனை வீழ்த்த துணை வலிமை வேண்டும் என்பதற்காகவும் தான். இறுதியில் அவர் வெற்றி காண்பார்.

    அதே போல் தான் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மை தலைவர் எழுச்சித் தமிழர், மக்கள் விடுதலைக்காக பல்வேறு யுக்திகளை மேற்கொள்கிறார். சமயத்தில் சிலரோடு கைகோர்க்கவும், அவர்களின் செயல்பாட்டோடு இணைவதும் நேர்கிறது.அது எந்த கட்சியாகவும், எந்த தலைவராகவும் இருக்கலாம் . படம் பார்க்கும் மக்கள் நிச்சயம் எம்.ஜி.ஆர். வெல்வார் என்பதை உணர்ந்து படம் பார்த்தது போல், மேன்மையாளர் தலைவர் எழுச்சித் தமிழர் வெல்வார் என்பது திண்ணம் என்பது உணர்ந்து அவர் வழி போராடுவோம்.