Tuesday, July 24, 2012

தயாரிப்பாளர் அவதாரமெடுக்கும் இயக்குன தோழர்கள் பார்வைக்கு.


சினிமாவும் ,சின்னத்திரையும் ஒருசேர ஒரு மாற்றத்திற்கு ஆட்பட்டு வருகிறது. அது பெரியதிரையிலும், சின்னத்திரையிலும், தயாரிப்பாளர்கள் எனும் தனித்தன்மை வாய்ந்த ஒரு பிரிவினர் மறைந்து, இயக்குனராக நுழைந்து,வெற்றி பெற்று தயாரிப்பாளர்களாக வடிவம் பெற்றவர்கள் வந்து விட்டனர்.

நானும் கூட இந்த மாற்றம், ஒரு நல்ல படைப்பாளியினை இன்னொரு நல்ல படைப்பாளி அடையாளம் காண்பது எளிது என்கிற அளவில், நிறைய புது படைப்பாளிகள் உருவாகும் நிலைஏற்படும் என கருதினேன். அது ஒரு வகையில் உண்மை என்று கூட நிருபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் டெக்னிஷியன் என்கிற தொழில்நுட்ப வல்லுநர் பிரிவுகளான இயக்கம், ஒளிப்பதிவு, போன்றவர்களை தாண்டி இருக்கும் ஊழியர்கள் சம்பள நிலை இன்றைக்கு ஆரோக்கியமாக இல்லை என்பதாக அறிகிறேன்.

அதற்கு காரணம், தொழில்முறை தயாரிப்பாளர்கள் எல்லாவற்றிலும் தாரளமாக இருபது போல், இந்த ஊழியர்கள் சம்பள நிலையிலும் இருந்து விடுகிறார்கள், இயக்குன தயாரிப்பாளர்கள், பட,மற்றும் எபிசோடு தயாரிப்பு செலவினை குறைக்கும் நோக்கு என்று இவர்கள் தொழிலாளர்கள் செலவினத்தை குறைக்க முற்படுகிறார்கள்.

இதனை தான் நகைச்சுவையாக ஒரு இயக்குனரை வைத்து குறுந்தகவல் சுற்றில் வந்தது. அது எப்படி ...... சார், நீங்கள் படம் இயக்கம் போது தயாரிப்பாளரிடம் இது வேண்டும் அது வேண்டும் என, படம் பிரமாண்டத்தை கூட வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு, நீங்கள் தயாரிக்கும் படத்தில் மட்டும் நாயகன்,நாயகியை அழுக்கு துணி அணிந்து இரண்டு தெருக்களில் ஓடவிட்டு,படம் எடுக்குறீர்கள்?, என்பதுதான் அது.

அந்த நாளில் சினிமா படபிடிப்பு தளமென்றால் மிக சிறப்பு உணவு தான், எல்லா தொழிலாளர்களும் ஒரு சேர தரமான உணவு உண்ணும் வாய்ப்பு.கிடைத்தது.இன்று இந்த புது தயாரிப்பாளர்கள் கவனம் இந்த உணவு எனப்படும், புரோடக்ட்சன் செலவு பக்கம் திரும்பி,கீழ்நிலை தொழிலாளர்கள் நன்று உணவு அருந்தும் வாய்ப்பில் மண் அள்ளி போட்டு உள்ளது.

தானத்தில் சிறந்தது அன்னதானம், அன்னத்தில் கை வைக்கும் இந்த புது அவதார தயாரிப்பாளர்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டுகிறேன்.

நவீன தீண்டாமையாய் நகர மேம்பாடு திட்டம் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்களை குறிவைத்து தாக்கி வருகிறது.


அந்த வகையில் சென்னை மக்களின் துப்புரவு பனி தேவை, துணி சலவை பனி தேவை, மின் வேலை பனி தேவை, தண்ணீர் மற்றும் வடிகால் குழாய் பனி தேவை, கட்டிட பனி தேவை,இன்னும் உள்ள அணைத்து பணிவிடை சேவை ( சர்வீஸ் இண்டஸ்ட்ரி) தேவையினை பூர்த்தி செய்து வந்த மக்கள், கூவம் கரையின் ஓரம் குடியேறி வசித்து வந்தனர்.

பக்கிங்கம் கால்வாய் சுத்தம் செய்து நகரத்தை அழகுபடுத்துகிறோம் என , நகரத்தின் அணைத்து தேவைகளையும் நிறைவேற்றி வந்த மக்களை அப்புறபடுத்தி, வேறு இடத்தில குடியமர்த்துகிறோம் என அவர்களை சேர்த்த இடம் தான் பெருங்குடி கண்ணகி நகர்.

சைதாபேட்டையில் இருந்து மாம்பலம் அலுவலகத்திற்கு மாற்றினாலே செல்ல தயங்கி, எப்பாடுபட்டாவது அந்த மாற்றலை ரத்து செய்யும் மனநிலை கொண்ட அதிகாரிகள், பல ஆண்டுகளாக வசித்து வந்த, பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகள் உள்ள மக்களை, அப்புறபடுத்த ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், அவர்களை சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கண்ணகி நகருக்கு மாற்றினார்கள் என்பதைவிட கொண்டுவந்து கொட்டினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த மக்கள் வேலைக்கு சென்று வாங்கும் கூலி கஞ்சிக்கே பற்றாது எனும் போது, அவர்கள் கண்ணகி நகரிலிருந்து பணிக்கு செல்லவும், அவர்களின் பிள்ளைகள் அங்கிருந்து பள்ளிக்கு செல்லும் செலவையும் பற்றி யாருக்கு என்ன கவலை?.பள்ளிக்கு அருகிலேயே இல்லத்தை பார்த்து கொள்வது என்பது, அதிகாரவர்க்கத்தின், ஆதிக்கவாதிகளின், பொருளாதார மேம்பாடு அடைந்தவர்களின் ஒரு அடிப்படை கோட்பாடு, ஆனால் ஒடுக்கப்பட்ட இந்த ஏழை வீட்டு பிள்ளைகள் எத்தனை மைல் கடந்து சென்று படித்தால் என்ன இல்லை இவர்கள் படிக்கதான் வேண்டுமா?.

சிந்தித்து பாருங்கள் சிந்தாதரிபேட்டையில் பள்ளி பயின்று வந்த ஒரு குழந்தை இன்று கண்ணகி நகரிலிருந்து பள்ளி செல்ல எத்தனை மணிக்கு புறப்பட வேண்டும், அந்த குழந்தை பள்ளி முடிந்து வீடு வர எத்தனை மணி ஆகும்?.

இப்படி சொல்லி மாளாத துன்பங்களுக்கும் அவதிக்கும் ஆளாகி, அவர்கள் வசிக்கும் கண்ணகி நகர் குடியிருப்பின் நிலை என்ன?.

அந்த பகுதி கண்ணகி நகர் என்று அழைக்கபட்டாலும் கூட, இன்னமும் அங்கு, சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மக்கள் குடியிருந்தார்களோ அந்த பகுதியின் பெயர் கொண்ட குடியிருப்புகளாக தனித்தனி பிளாக்குகளாக வசித்து வருகின்றனர்.

அந்த பிளாக்குகளில் அவர்களை குடியேற்றும் போது அவை முடிவடையாத நிலை அதுவும் இல்லாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்பின் அளவு 190 சதுர அடி.முற்று பெறாத குடியிருப்பில் அமர்த்தியதோடு, அந்த பகுதிக்கு என சாலை வசதி இல்லாத நிலையிலும், குடிநீர்வடிகால் வசதிகள் தராத நிலையில், ஒரே வரியில் சொல்வதானால் சராசரி மனிதன் வாழ்வதற்கு உரிய எந்த அடிப்படை சூழலும் இல்லாத நிலையில் மக்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

ஏழை மக்கள் படிக்க தகுந்த பள்ளிகள் கல்லூரிகள் இந்த பகுதியில் இல்லை. சென்னையில் உள்ள எல்லா வகையான மக்களும் எல்லாவிதமான வசதிக்கும் தங்களை ஆட்படுத்தி கொண்டும் அதில் குறைகள் இருந்தால் உடனே சரி செய்தி கொள்வதற்கும் வாய்ப்பு பெற்று உள்ளனர்.

ஆனால் இவையெல்லாம் சாத்தியமாக உழைத்த இந்த மக்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை, இவர்கள் மீது மட்டும் ஏன் அரசின் பார்வை படுவதில்லை, ஆதரவு கை தொடுவதில்லை ஏன் இந்த நவீன தீண்டாமை?.

இவர்களுக்காக தொடர்ந்து போராடி வரும் ஒரு இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். அந்த வகையில் நேற்று.23 .07 .12 அன்று காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க. விடுதலைச்செழியன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

நான் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்டது தான் இந்த கண்ணகி நகர் அப்போது இந்த மக்களிடம் நான் பேசியது:

"இந்த நிலை மட்டும் அல்ல பொதுவான சமூக நிலை மாற வேண்டுமானால் பொருளாதார மாற்றம் வேண்டும். அப்படிப்பட்ட பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அதற்கு கல்வி நிச்சயம் வேண்டும். அப்படிப்பட்ட கல்வியினை வழங்க இந்த பகுதியில் நல்ல பள்ளிகள், சிறப்பு பாட வகுப்புகள் அமைக்கவும்,இந்த பகுதியில் உள்ள பட்டதாரிகள், இங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்ற வழிவகை செய்யும் வகையில் அவர்களுக்கு சிறப்பு தகுதிகள் பயிற்று மையங்கள் ஏற்படுத்துவேன்" .


பேசி முடித்தவுடன் அவர்கள் கையினை தட்டியதோடு அவர்கள் பனி முடிந்ததை எண்ணிவிட்டனர். அதே கை கொண்டு அளித்த வாக்குகள் இன்றைக்கு அவர்களுக்கு உதவாத நிலையிலும்,


இன்றும் அவர்களுக்காக போராடுவது, முன் நிற்பது, எனை பிரதிநிதியாய் அவர்கள் முன் நிறுத்திய , ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்கான ஒரே தலைவர் மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்களின் விடுதலைச் சிறுத்தைகள் தான் என்பதை இனியாவது கருத்தில் கொள்ளுங்கள்.

Monday, July 16, 2012

மேன்மையாளர் எழுச்சித் தமிழர் அவர்களின் முதல் ஒலி  -----  நடிகர் அமீர் கான் எதிரொலி
இன்றைய பரபரப்பான செய்தி, இந்தி திரைப்பட நடிகர் அமீர் கான் இந்திய பிரதமரிடம் , மனிதனே மனித கழிவுகளை அகற்றுவதை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை என்பது தான்.நல்ல மனிதநேயமிக்க எண்ணம் தான் அணைத்து ஊடகங்களும் பாராட்டுகின்றன. அமீர் கான் இப்போது அவர்களுக்கு மாபெரும் மக்கள் நல தொண்டர். அவர் அப்படி இருப்பதில் நமக்கு மகிழ்ச்சி தான். ஆனால் , மனித கழிவினை மனிதனே அள்ளும் அவலத்தை எதிர்த்து ஒவ்வொரு ஊரிலும்,  ஒவ்வொரு கிராமத்திலும் , பட்டி தொட்டிகளிலும் இவற்றையெல்லாம் தாண்டி இந்த நாடு அனுதினமும் நிம்மதி பெருமூச்சு விடும் சுவாசத்தின் அடிப்படையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் உறைவிடங்களான சேரிகளிலும் தொடர்ந்து ஒலித்து வந்ததே, அதை யாரும் மறுக்க முடியுமா?.  

  "தொடர்வண்டித் துறையில் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமை தேசத்திற்கே பெருத்த அவமானம்."
"21ம் நூற்றாண்டில் கூட தொடர்வண்டித் துறையில் துப்புரவு தொழிலாளர்கள் மனிதகழிவுகளை கையால் அகற்றித் தூய்மை செய்யும் நிலை உள்ளது. மனிதகழிவுகளை அகற்றித் தூய்மை செய்ய அரசு முறையான இயந்திர பொறிகளை வழங்க வேண்டும்".......என 8.07.2009 நாடாளுமன்றத்தில் தொடர்வண்டித் துறையின் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று மேன்மையாளர் எழுச்சித் தமிழர் அவர்கள் உரையாற்றினார்கள்.
இன்று மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்களின் குரலை அப்படியே எதிரொலித்து இருக்கிறார் நடிகர் அமீர் கான், இது உடனே எல்லோர் காதுகளிலும் ஒலிக்கிறது . அமீர் கானுக்கு , மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக்  அளித்துள்ள பதில் என்ன தெரியுமா ?. இது சமந்தமான சட்ட முன்வடிவு அணைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டு தற்போது வரும் கூட தொடரிலேயே   "மனித கழிவினை மனிதனே அள்ளும் அவல தடை" மசோதா கொண்டுவரப்படும் என்பது தான். ஆக, முகுல் வாஸ்னிக் அவர்களின் பதில் உணர்த்தும் உண்மை ,ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட மேன்மையாளர் எழுச்சித்தமிழர் செயலாற்றியதின் விளைவு அவரது மனிதநேய மான்பிற்கு வெற்றியினை தேடி தந்து இருக்கிறது. 
முதல் ஒலி இன்றி எதிரொலி தோன்றாது. அந்த வகையில் இன்று அமீர் கானின் எதிரொலியினை இன்று சில ஊடகங்கள் தூக்கி பிடித்தாலும் மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்களின் குரல் தான் முதற்குரல் என்பதை வரலாறு மறக்காது.மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்களின் முதல் ஒலி இன்றி இது சாத்தியம் இல்லை என்பதை நாமும் நாடும் நிச்சயம் அறிவோம்.தலைவர் அவர்களின் மாற்றுமொரு சமூக பார்வை வேண்டுகோள் இன்று நிறைவேறும் நிலை உருவாகியுள்ளதற்கு அவரின் தம்பியாய் பெருமிதம் கொள்வோம்.

மேதகு எண்ணம் கொண்ட  மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்களை சார்ந்தது தான் ஈழ விடுதலை என அவருடன் சேர்ந்து போராட ஒன்றுபடுங்கள்.

வாக்கு வங்கி அரசியல் என தேர்தல் அரசியலில் பங்கு பெரும் கட்சிகளை வகைபடுத்தியும், கொச்சையாக ஓட்டுபொறுக்கி அரசியல் என்றும் , தேர்தல் அரசியலில் நேரடி பங்கேற்பு இல்லாத இயக்கங்கள் பேசி வருகின்றன. தமிழ் தேசிய களமானாலும் அல்லது தமிழர் நல களமானாலும், உண்மையில் போராடுவது அவர்கள் தான் என்றும் வாக்கு வங்கி அரசியலில் உள்ளவர்கள் கிடையாது என்பது போன்ற ஒரு போலித் தோற்றத்தை இவர்கள் உருவாக்க முனைகின்றனர். ( மறந்தும் இவர்கள் தலித் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க மாட்டார்கள். தலித் பிரச்சனை தலித்துகளுக்கு, தமிழர் பிரச்சனையும் தலித்துக்கு தான் என்பது இவர்களது நிலை). இந்த வாக்கு அரசியல் வசை பாடுதலில் கூட அவர்களுக்கு வேண்டிய வேண்டாதவர்கள் என்பது உண்டு.

தமிழ் ஈழ பிரச்சனையில், திரு.கருணாநிதி அவர்களின் செயல்பாடு அல்லது செயல்படாமை தமிழர் விரோதம், அதற்காக அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஈழ விடுதலை போராளியாய் இவர்கள் சித்தரிப்பது தான் உண்மை நாடு நிலைமையா?.

 தேர்தல் அரசியலில் உள்ளவர்கள் தான் வாக்கு பொறுக்க, தமிழர் நலன் விரோதிகள் என இவர்களால் அடையாளம் காட்டப்பட்ட கட்சிகளோடு கூட்டு சேர்கின்றனர், ஆதரிகின்றனர் ,எந்த நிர்பந்தத்திற்காக, எதை பொறுக்க அல்லது பெருக்க, அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஈழ விடுதலைக்கு எதிரான நிலை கொண்டவர் என்பதை முழுவதும் உணர்ந்து, அவரை தூக்கி பிடிகின்றீர்கள்?.

வாக்கு பொறுக்கி அரசியல் வேண்டாம் ஆனால், ஈழ விடுதலைக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக நீங்கள் கை காட்டும் திரு.கருணாநிதியும் , இனி ஈழம் மலர உதவ போவதாக நீங்கள் ஆராதிக்கும் அம்மையார் ஜெயலலிதா அவர்களும்,இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே?.

தமிழ் தேசிய உணர்வை சரி வர எடுத்து செல்லாததாலும், தமிழ் தேசிய உணர்விலும்,உணர்வாளர்களிலும் சாதிய வேறுபாட்டை புகுத்தியதாலும் தானே, முள்ளிவாய்க்கால்  படுகொலைக்கு பின், தமிழ் உணர்வு தட்டி எழுப்பபட்ட நிலையிலும், உங்களால் தமிழ் தேசிய தலைவர்களில் முதன்மை தலைவராக முன்னிறுத்தப்பட்ட அண்ணன் வைகோ அவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாத சூழல் அமைந்தது.

ஆக அதிகாரம் கையில் இருந்தும்  ஒன்றும் செய்யவில்லை திரு.கருணாநிதி என நீங்கள் கை நீட்டி குற்றம்சாட்டும்  அதே வேளையில், தமிழ் உணர்வையும் உணர்வாளர்களையும் ஒருங்கிணைத்து அதிகாரத்தை கைப்பற்றும் வைப்பை தவறவிட்ட உங்களை நோக்கியும்  சில விரல்கள் குற்றம்சாட்டுவதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தமிழ் இன உணர்வை ஒருமுகபடுத்தி அதனை அதிகாரம் கைப்பற்றவல்ல ஒரு போராட்டமாக கொண்டு சென்றால் தான் ஈழ விடுதலைக்கு  வழி காண முடியும். அதிலும் மிக மிக முக்கியமாக தூக்கி எறியபடவேண்டியது சாதிய சிந்தனையும் சாதிய பார்வையும்.

தமிழ் தேசிய போராட்டங்கள் என்று, மக்கட்கூட்டம் இயல்பாகவே வரும் இடத்தில், ஞாயிறு  அன்றோ, விடுமுறை தினத்திலோ, இன்றைக்கு இருக்கு நவீன உலக மக்கள் ஏற்று கொள்ளும் பேஷன் போராட்ட முறைகளை தொடுத்து சாதிக்க கூடியது, செய்திதாள்களிலும், ஊடகத்திலும் வரும் செய்தி பதிவு தான்.

விடுதலைச் சிறுத்தைகளை வழி நடத்தும் தலைவர் மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்கள்,சாதிய  அடக்குமுறைக்கும்,வன்கொடுமை ஒடுக்குமுறைக்கும் ஆளாகி, வாழ்வாதாரத்தை சரி செய்வதற்குள் வாழ்க்கையே முடிந்து விடும் சூழலில் உள்ள மக்களை அவர்கள் விடுதலைக்காக ஒன்று சேர்க்கும் அதே வேளையில், குடிசைகள் இங்கு எரிந்தாலும் ஈழத்தில் எரிந்தாலும் நாம் போராட வேண்டும் என்கிற உணர்வை அவர்களிடத்தில் விதைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள வீடுகளின் எண்ணிக்கையினை விட, சேரிகளில் உள்ள குடிசைகளின் எண்ணிக்கை அதிகம், வீதிகளில் உள்ள சாதிய சீமான்களை விட சேரிகளில்  உள்ள சாதிக்கும் மனவலிமை கொண்ட தலித்துகள் அதிகம்.மற்ற அத்தனை தமிழ் தேசிய தலைவர்களும்  சேர்ந்து மேதகு தலைவர் பிரபாகரனை கொண்டு சேர்த்த வீடுகளை காட்டிலும் தலைவர் மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்கள் அவரை கொண்டு சேர்த்துள்ள குடிசைகள் அதிகம். மற்ற அத்தனை பேரும் ஈழவிடுத்தலையினை விதைத்துள்ள மக்களின் எண்ணிக்கை காட்டிலும் அதிகமான தலித்துகளின் உள்ளத்தில், அதனை விதைத்துள்ளார் தலைவர் மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்கள்.

தலித் விடுதலையினை பெற்று தரும் ஆற்றல் தலைவர் மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்களிடமும் அதற்கான கருத்தியல் விடுதலைச் சிறுத்தைகளிடம்  உண்டு.

தமிழர் விடுதலை என்பது தலித்துகள் இல்லாமல் ???????.

எனவே காலத்தின் கட்டளையினை உணர்ந்து , தமிழ் தேசிய களத்தில், உங்கள் பின்னால் பத்தடி தள்ளி ,அல்லது இன்னும் பின்னால் நின்று நூறடி தள்ளி வர தயாராக இருக்கிறேன், அனைவரையும் தலைமையேற்று செல்லும் திறனும்,அறிவும் ஆற்றலும் இருந்தாலும் , தமிழர் நலனுக்காக எந்த நிலையிலும் நின்று போராடுவேன் என தன்னலமில்லா தமிழ்த்தாயின் அன்புமகள் கரும்புலி.தோழர்.செங்கொடியின் வீரவணக்க நிகழ்வில் பெருந்தன்மையோடு உறுதியேற்ற, மேதகு எண்ணம் கொண்ட  மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்களை சார்ந்தது தான் ஈழ விடுதலை என அவருடன் சேர்ந்து போராட ஒன்றுபடுங்கள்.